தற்போது உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக அரசியல் ஈரோடு இடை தேர்தலை முன்வைத்து பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இதனை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் அனைவரும் அவர்களுடைய வேட்பாளர்களை அறிவித்து விட்டு நிலையில் பாஜக மட்டும் அந்த கட்சியின் நிலைப்பாட்டை இதுவரையிலும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது.
ஆனால் பாஜக இது தொடர்பாக எனது அறிவிப்பு வெளியிடாத நிலையில், பாஜகவை எதிர்பார்த்து எடப்பாடி பழனிச்சாமி சற்றே பொறுமை காப்பார் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அவர் திடீரென்று தன்னுடைய தரப்பு வேட்பாளரை அறிவித்தார்.
இதற்கு நடுவே எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தனித்தனியே பாஜக மேலிடத்தை சந்தித்து ஈரோடு இடைத்தேர்தலில் தங்களது ஆதரவை நாடினர்.ஆனால் எடப்பாடி அடுத்தடுத்து யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக முடிவெடுத்து செயல்படும் பல அதிரடிகளை செய்து வருவதால் அவரைப் பார்த்து பாஜக சற்று திகைத்துப் போய் தான் இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் தனித்,தனியே பாஜகவிடம் ஆதரவை கூறி இருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணியின் சார்பாக முன்னாள் சட்டசபை உறுப்பினர் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பன்னீர் செல்வமும் செந்தில் முருகன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறியிருக்கிறார். அதே நேரம், பாஜக போட்டியிட்டால் தங்களுடைய வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும் பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில்தான் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று கேட்பதற்காக நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணமானார். பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய இல்லத்தில் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார்.
அண்ணாமலையுடன் கரு. நாகராஜன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி டி ரவி உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றுக் கொண்டனர்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற கேள்வி எழுந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை பாஜகவின் மாநில தலைமை சந்தித்திருப்பது தமிழக அரசியல்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.