வேலூர் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள வளையப்பட்டி ஊராட்சி குரும்பபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (57). இவர் ஒரு கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் இரவு வளையப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் வழியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணை அருகே நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக டூ- வீலரில் வந்த மர்ம நபர் முன்னால் நடந்து சென்ற கந்தசாமி மீது கவனக்குறைவால் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. எதிர்பாராத இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கந்தசாமி தலையில் பலத்த காயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தோர், கந்தசாமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கந்தசாமி முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக கூறினர். இதனையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, கந்தசாமியின் மகன் சவுந்தரராஜன் மோகனூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றவரை தேடி வருகின்றனர்.