கர்நாடகா மாநிலம் ஹசான் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார், இவரும் இவர் மனைவி சைத்ராவும் விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர். இதனால் ஹோலேனா ராசிபுரா என்ற உள்ளூர் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இந்த விவாகரத்து வழக்கை விசாரித்து இருவருக்கும் நீதிபதி கவுன்சலிங் வழங்கி வந்தார். இந்நிலையில், நேற்று கவுன்சிலிங் போது இருவரும் பிரச்சனையை பேசி தீர்த்து இணைந்து வாழப்போவதாக முடிவெடுத்தனர்.
தொடர்ந்து கவுன்சிலிங் அறையை விட்டு இருவரும் ஒன்றாக வெளியே வந்தனர். சைத்ரா கழிப்பறை சென்று வருகிறேன் என்று கூறி சென்ற போது, திடீரென சிவகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சைத்ராவின் கழுத்தை அறுத்துள்ளார். சிவகுமாரின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் இருந்த சைத்ராவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதுமட்டுமின்றி, அவர்களின் குழந்தையையும் சிவகுமார் தாக்க முற்பட்டார். அதற்குள்ள சிவகுமாரை பிடித்து குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். காவல்துறையினர் சிவகுமாரை பிடித்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மூத்த காவலர் ஹரிராம் சங்கர் கூறுகையில், நீதிமன்ற வளாகத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கைப்பற்றி, அந்த நபரை காவலில் எடுத்துள்ளோம். அவர் மீது திட்டமிட்ட கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.