திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் ஒட்டன்சத்திரத்தில் ஒரு தனியார் நூற்பாலைக்கு சொந்தமான தங்கும் விடுதி இருக்கிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்களை அழைத்து வந்து, பாபு சாண்டா என்ற புரோக்கர் நூற்பாலையில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். அந்த வட மாநில தொழிலாளர்கள் நூட்பாலையில் உள்ள விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்த, ரீத்தா முனாக்கூர், போர்சா ராணி ஜெயா என்ற இரண்டு இளம் பெண்கள் அந்த புரோக்கர் மூலமாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் ஒரு ரூம் கொடுத்து தங்க வைத்து பத்து நாட்களாக அவர்கள் இருவரும் நூற்பாலையில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் அந்த வேலை கடினமாக இருந்ததால் அந்த புரோக்கரிடம் பெண்கள் இருவரும் எங்களால் இங்கு வேலை செய்ய முடியவில்லை. அதனால் எங்களை ஊருக்கு அனுப்பி விடுங்கள் என்று கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாபு சான்டா, அந்த பெண்களை அறைக்குள் பூட்டி வைத்துள்ளார். மேலும் பெண்களுக்கு சாப்பாடு, தண்ணீர் ஏதும் கொடுக்காமல் இரண்டு நாட்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் அவர்களின் ஐடி கார்டு மற்றும் செல்போன்களையும் வாங்கி வைத்துக் கொண்டுள்ளார். இரண்டு நாட்களாக அறைக்குள் பூட்டி வைக்கப்பட்ட அந்த பெண்கள் நேற்று காலை கதவை திறந்தவுடன் புரோக்கரை தள்ளிவிட்டு தப்பித்து வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு ஓடி வந்துள்ளனர்.
காவல் நிலையத்திற்கு வந்த அவர்களை ஆசுவசப்படுத்தி சிற்றுண்டி வாங்கி கொடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமையை அவர்களிடம் கூறினர். இதனையடுத்து அந்த பெண்களின் நிலையை உணர்ந்த வேடசந்தூர் காவல்துறையினர் உடனடியாக இளம்பெண்கள் இருவரும் ஓடிசா மாநிலத்திற்கு பாதுகாப்பாக செல்லவும், அவர்களுடன் துணைக்கு ஒருவரை அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.