சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே காட்டெருமை தாக்கியதில் படுகாயமடைந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு அருகேயுள்ள பட்டிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவி. இவர் ஏற்காடு நகர் பகுதியில் மகளிர் திட்டத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்ற தேவி, மாலையில் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருந்தார். பட்டிபாடி பகுதியை அவர் கடந்தபோது, சாலையில் நடந்து சென்ற காட்டெருமை ஒன்று, தேவி ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக மோதியது. இதனால் சாலையில் தூக்கி எறியப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தோர், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் ஏற்காடு காவல்தூறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.