தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருச்சி ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 4 தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (மார்ச் 21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 22, 23ஆகிய தேதிகளில் கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 24ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.