தக்காளியை தொடர்ந்து கோதுமை விலையும் அதிகரித்திருப்பது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மழை மற்றும் வரத்து குறைவால் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டது. தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது கோதுமையின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 10.8 கோடி டன் கோதுமை பயன்பாடு உள்ளது. ஆனால், உற்பத்தியில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இந்தாண்டு எதிர்பார்ப்பை விட அறுவடையில் 10 சதவீதம் குறைந்துள்ளதால், கோதுமை வரத்து சந்தைகளில் குறைய தொடங்கியிருக்கிறது.
இனி வரும் மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் பதுக்கல்களும் தொடங்கிவிட்டன. இதனால், சந்தையில் கோதுமை விலை எகிற தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு கோதுமை விலை உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தோர் சந்தையில் மொத்த விலை கிலோவுக்கு 28 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. வட இந்திய மக்களின் முக்கிய உணவு பொருளான கோதுமை விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோதுமை விலையை கட்டுப்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன. விலை குறைய கோதுமை மீதான இறக்குமதி வரியை 40%இல் இருந்து குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.