ஈரோட்டில் பேக்கரியில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனியார் நிறுவனத்தில்
பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இவரது மனைவி தாமரைச்செல்வி, தங்கை சிவகாமி மற்றும் 4 வயது மகள் தர்ஷினி ஆகியோர் சொந்த வேலை காரணமாக ஈரோடு வந்து விட்டு வீடு திரும்பும் போது வில்லரசம்பட்டி பிரிவில் உள்ள பேக்கரியில் முட்டை பப்ஸ் சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் இரவு திடீரென 3 பேருக்கும் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவின் பேரில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அருண் தனியார் பேக்கரியில் முட்டை பப்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினார். சோதனை முடிவு தெரியும் வரை உணவு பொருட்கள் தயாரிப்பை நிறுத்துமாறு கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.