கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கர்நாடகா அரசியல் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசன் போட்டியிடுகிறார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் நெடுஞ்செழியன் என்பவரை வேட்பாளராக அறிவித்திருந்தார். ஓபிஎஸ் தரப்பில், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ், காந்தி நகர் தொகுதியில் குமார் என்பவர் போட்டியிடுகிறார் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், புலிகேசி நகர் பகுதியில் போட்டியிடும் எடப்பாடி தரப்பை சேர்ந்த அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. அதே சமயம் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் போட்டியிடுவதாக அறிவித்த 3 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த நிலையில், தற்போது கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.