லால்குடி அருகே ஜல்லிக்கட்டு வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி தாளக்குடி கீரமங்கலம் கிழக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சதீஷ்குமார் (27). இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்டபோது அவரை காளை முட்டியது. இதில், அவரது வயிற்றின் உள்பாகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவரால் பூரண நலம் பெற முடியவில்லை. மேலும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால், விரக்தி அடைந்த சதீஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தந்தை முருகேசன் துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார், திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜல்லிக்கட்டு வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.