பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சம்பளம் மற்றும் பிற சலுகைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்..
பிரதமரின் புதிய தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிதி திவேரி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள மஹ்மூர்கஞ்சை சேர்ந்தவர். இந்தப் பகுதி பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு, வாரணாசியில் கூடுதல் ஆணையராக பணியாற்றினார். பின் 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார், அன்றிலிருந்து பொதுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது பிரதமரின் தனிச்செயலாளராக இவர் நியமிக்கப்படுவதற்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2023ம் ஆண்டு முதல் இந்த பணியில் இவர் பணியாற்றி வருகிறார். தற்போது அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மோடிக்கு தற்போது விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகிய இரண்டு தனி செயலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நிதி திவாரியும் மோடியின் தனிச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு நியமிக்கப்பட்ட தனிச்செயலாளர்களிலே இவர்தான் மிகவும் இளையவர் ஆவார். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.1,44,200 வழங்கப்படுகிறது. இதனுடன் அகவிலைப்படி, வீட்டுப்படி (HRA),பயணப்படி (TA)மற்றும் பிற கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.