நிஃபா வைரஸ் பரவல் எதிரொலியாக மாஹேவில் உள்ள பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியின் ஒரு பிராந்தியமான மாஹே, கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு அருகே உள்ளது. ஆகவே, அங்கிருந்து புதுச்சேரி மாநிலம் மாஹே பிராந்தியத்திற்கு நிஃபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதால் புதுச்சேரி அரசு மாநில எல்லைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் உள்ளிட்ட கல்வி
நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கைகளை கழுவ வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், வகுப்பறைகளில் சமூக
இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை
புதுச்சேரி அரசின் அறிவுறுத்தலின் பேரில் பிராந்தியத்திய நிர்வாகம்
உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாஹே பிராந்தியத்தில் நிலைமைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்று
ஆளுநர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் துணை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். மாஹே பிராந்தியத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணஙகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.