நிஃபா வைரஸ் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறைக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் இரண்டு நபர்களுக்கு உறுதி செய்யப்படாத வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் உயிரிழந்த இருவருக்கும் நிஃபா வைரஸ் இருந்தது தெரியவந்தது. 2 பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நிஃபா வைரஸ் பரவலைத் தடுக்க கேரளா தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரு மாநில எல்லைகளில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவோரைக் கண்காணிக்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், நிஃபா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் நிஃபா வைரஸுடன் தொடர்புடைய இரண்டு இறப்புகள் கவலையளிக்கின்றன. இது காற்றில் பரவவில்லை என்றாலும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடிய தொற்றுநோயாகும்.
கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, அறிகுறிகளைப் பற்றி பொதுமக்களுக்கு அறிவுறுத்தவும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்தவும் வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.