இடைநீக்கம் செய்யப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைப் பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பாலியல் துன்புறுத்தல் புகாரை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து பெறாமல் குழு விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை காவல் துறையினர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் பாலியல் உதவி வழங்குமாறு வற்புறுத்தியதாக மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நிர்மலா தேவி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் சந்தானத்தை அப்போதைய மாநில ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நியமித்தார். இதையடுத்து, நிர்மலா தேவி மீதான விசாரணையை சிபிசிஐடியிலிருந்து சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றக் கோரி, தமிழக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.கணேசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நிர்மலா தேவி மீதான விசாரணையை சிபிசிஐடியில் இருந்து பெண் டிஐஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றக் கோரிய மனுவை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி ஜே.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பிறகு இறுதி உத்தரவை நீதிமன்றம் ஒத்திவைத்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இறுதி உத்தரவு ஏப்ரல் 26 அன்று அறிவிக்கப்படும். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தை விசாரிக்க உள் புகார் குழுவும் அமைக்கப்பட்டது என்றும் அரசு சமர்பித்தது. இந்த பாலியல் குற்றச்சாட்டை உள் புகார் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் பெஞ்சை கோரியிருந்தார்.இருப்பினும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரைப் பெறாமல் குழு விசாரணையைத் தொடர முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. பாதிக்கப்பட்டவர் ஏதேனும் புகார் அளித்திருந்தால் குழுவின் முன் சமர்ப்பிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.