நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா இந்தி தெரியாமல் தடுமாறியதை நிர்மலா சீதாராமன் நடிப்பு எனக் கூறி கிண்டல் செய்தார்.
வக்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று மாநிலங்களவையில் அதற்கான விவாதம் நடந்தது. அதில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, அந்த மசோதாவை எதிர்த்துப் பேசினார். அப்போது அவர் பாஜகவின் ஸ்லோகமான “சப்கா சாத் சப்கா விகாஸ்” என்ற வார்த்தையை சொல்ல முயன்றபோது சரியாக சொல்ல தெரியாமல் குளறி, பின்னர் அருகே இருந்தவரிடம் கேட்டு அதை சரியாக சொன்னார்.
திருச்சி சிவாவிற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ திருச்சி சிவா இந்தி பாடல்களை நன்றாக பாடுவார். இது இங்குள்ள பெரும்பாலானோருக்கு நன்றாக தெரியும். ஆனால், “சப்கா சாத், சப்கா விகாஸ்” என்ற வாக்கியத்தை உங்களால் சொல்ல முடியாதா? என கேள்வி எழுப்பியதோடு, “சப்கா சாத், சப்கா விகாஸ்” என்பதை சொல்ல முடியாமல் திருச்சி சிவா திணறியதை கிண்டல் செய்தார்.
இந்தியில் பாட்டு பாடுவீர்கள், ஆனால் பேச முடியாதா? தனக்கு இந்தி தெரியாது என்பதை போன்று பதிவு செய்ய திருச்சி சிவா முயல்கிறார்” என நிர்மலா சீதாராமன் பேசினார். நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு பதிலளித்த திருச்சி சிவா, “ஆம், நான் இந்தி பாடல்கள் பாடுவேன். என்னுடைய நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பாகல் ஜி இங்கு இல்லை. அவர் தான் என்னை இந்தி பாடல்களை பாட வைப்பார். அவர் எழுதிக் கொடுக்கும் ஆங்கில பாடல் வரிகளை வைத்து தான் இந்தி பாடல்களை பாடுவேன். இதன் பொருள் உங்களுக்கு தெரியுமா என கேட்பார். எனக்கு தெரியாது. அவர் எனக்கு விளக்கம் கொடுப்பார்” என்றார்.