பல வருடங்களாக நித்தியானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். ஆனால், அவருடைய ஆசிரமம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக தெரிவித்து, தற்போது அவருடைய ஆசிரமம் இடிக்கப்பட்டு இருப்பதால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பச்சையம்மன் நகர் குவாரி சாலை பகுதியில், நித்தியானந்தா ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நித்தியானந்தாவின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதோடு, மாடுகளை வைத்து, கோசாலை ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். சென்ற 15 வருட காலமாக அந்த பகுதியில் திரிசூலம் கைலாசா என்ற பெயரில், நித்தியானந்தா ஆசிரமம் இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த ஆசிரமத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்நிலையில் தான், இந்த ஆசிரமத்தை சுற்றி இருக்கக்கூடிய நிலம் அரசுக்கு சொந்தமான நிலம் என்றும், அதனை ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்றும் புகார் எழுந்தது.
புகார் எழுந்ததை அடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. ஆகவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின் பேரில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த்துறையை சேர்ந்தவர்கள், காவல்துறையினரின் பாதுகாப்போடு, அந்த பகுதியில் இருக்கின்ற நிலத்தை அளவீடு செய்தனர். அப்போது, நித்யானந்தா ஆசிரமத்திற்கு சொந்தமாக சுமார் 76 சென்ட் நிலத்திற்கு மட்டுமே, பட்டா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன், ஆசிரமத்தை சுற்றி இருக்கக்கூடிய அரசு நிலங்களை ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் எழுப்பி, ஆக்கிரமிப்பு செய்திருந்தது தெரியவந்தது. ஆகவே, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதும், இதில் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் தான், நேற்றைய தினம் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், வருவாய் துறையினர் ஆசிரமம் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த அரசு நிலத்தை மீட்டிருக்கிறார்கள்.
அதிகாரிகள் மீட்ட அந்த அரசு நிலத்தின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் வரையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதே போல, அந்த பகுதியில், மலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்டி குடியிருப்பவர்களையும், அவர்களுடைய வீடுகளை காலி செய்ய கோரி, அரசு தரப்பில், நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார். தற்சமயம் அந்த பகுதியில், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளின், சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.