கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு பதில் அளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ப்ரியாவுக்கு உயிருக்கு ஆபத்து என்பதை கூறி கால்களை அகற்றி உள்ளனர். அவருக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னர் கால்களில் போடப்பட்ட கட்டு இறுக்கமாக போட்டதே பாதிப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து உடல் பாகங்கள் அழுகத் தொடங்கி பாதிப்பு இதயம் வரை சென்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் சோமசுந்தர், பால்ராம் சங்கர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக நேறறு சென்னை காவல்துறையிடம் மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிக்கையை ஒப்படைத்தது. அதில் மருத்துவர்கள் கவனக் குறைவாக நடந்து கொண்டதுதான் பாதிப்புக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே கவனக்குறைவாக செயல்பட்டுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இயற்கைக்கு மாறான வழக்கு என காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் நேற்று அது மாற்றப்பட்டு மருத்துவர்களின் அலட்சியத்தால் நடந்த மரணம் என்றும் அதற்குண்டான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்து. மருத்துவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் காவல்துறையிடம் இருந்துதலைமறைவானால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மருத்துவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நான் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் வீட்டுக்கு திரும்பிவிட்டேன் இதனால் அந்த கேஸ் விவரம் தெரியாது என மருத்துவர்கள் எப்படி கூற முடியும்? அவ்வாறு கூறி தப்பித்துக் கொள்வதா? என்று கடுமையாக சாடினார்கள். மேலும் இருவருக்கும் முன்ஜாமின் வழங்கவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.