கடந்த 4 ஆண்டுகளில் வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வரப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய தரவுகள் எதுவும் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பி தபீர் காவ், கடந்த 4 ஆண்டுகளில் வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வரப்பட்ட கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் மாநில வாரியான விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.. மத்திய புள்ளியியல் மற்றும் திட்டத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், இதற்கு பதிலளித்தார்.. அப்போது, தனது அமைச்சகத்தின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மேற்கொண்ட வீட்டு நுகர்வோர் செலவுகள் குறித்த பெரிய மாதிரி ஆய்வுகளின் அடிப்படையில், நிதி ஆயோக், வறுமைக் கோடு மற்றும் வறுமை விகிதத்தை மதிப்பிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடந்த 4 ஆண்டுகளில் வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வரப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய தரவுகள் எதுவும் இல்லை என்றும், 2011-12 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே தரவுகள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.. 2011-12 ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 27 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், இந்த எண்ணிக்கை மார்ச் 1, 2012 நிலவரப்படி மக்கள்தொகை அடிப்படையில் அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் “ 2011-12 ஆம் ஆண்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகையின் மாநில/யூனியன் பிரதேச வாரியான விவரங்களை அமைச்சர் பகிர்ந்து கொண்டார், மேலும் தரவுகளின்படி, சத்தீஸ்கர் (39.93%), ஜார்கண்ட் (36.96%), மணிப்பூர் (36.86%), அருணாச்சல பிரதேசம் (34.67%) மற்றும் பீகார் (33.74%) ஆகியவை ஏழ்மையான மாநிலங்களாக உள்ளன.. தற்போதைய பாஜக அரசு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது என்றும், நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது..” என்றும் இந்தர்ஜித் சிங் கூறினார்.
வேலையில்லாத் திண்டாட்டம், கோவிட் சமயத்தில் ஏற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்பு, வறுமைத் தரவு போன்றவற்றின் தரவுகளை வெளியிடாததற்காக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இருப்பினும், இந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள பாஜக அரசு, இது போன்ற முக்கியமான தரவுகளை கணக்கிடுவதற்கான பல முறைகள் குறைபாடுள்ளவை என்றும் புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.