ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் ஜாமீன் மனு மீதான சிபிஐ பதில் மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தற்போது 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி அரசு சார்பில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் என்ற விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக முதலமைச்சராக இருப்பவர் கொடியேற்றுவார், அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் இருக்கும் சூழலில் அவருக்கு பதில் யார் கொடியேற்றும் அதிகாரத்தை பெறுவார்கள் என பலராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து இதுதொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எழுதிய கடிதத்தில், சுதந்திர தினத்தன்று மாநில அரசு சார்பில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கொடியை ஏற்றும் அதிகாரத்தை கல்வித்துறை அமைச்சர் அதிஷி மர்லினாவுக்கு அளிக்கும்படி தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு மாறாக துணைநிலை ஆளுநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், சிறையிலிருக்கும் அவர் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என பொது நிர்வாகதுறை தெரிவித்தது.
அதனைத்தொடர்ந்து, டெல்லி மாநில உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டை கொடியேற்ற நியமித்து துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். டெல்லி துணை நிலை ஆளுநர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ”சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பின் நடைபெறும் சம்பிரதாய அணிவகுப்பை டெல்லி காவல்துறையினரே மேற்கொள்வார்கள். காவல்துறை தொடர்பான விவகாரங்கள் உள்துறைக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேற்கூறியதை கருத்தில் கொண்டு, மாநில அளவிலான சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு உள்துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட்டை நியமிப்பதில் துணைநிலை ஆளுநர் மகிழ்ச்சி அடைகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Read more ; ‘Work From Home’ அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்..!! மிஸ் பண்ணிடாதீங்க.. ரெடியா?