விழுப்புரத்தில் காதலிக்கு பரிசு பொருட்கள் வாங்க பணம் இல்லாததால் கல்லூரி மாணவர்கள் இருவர் ஆடு திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மலையரசன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்
ரேணுகா. இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். திடீரென நேற்று ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது இரு இளைஞர்கள் ஆடு ஒன்றினை தூக்கி கொண்டு இருசக்கர
வாகனத்தில் சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரேணுகா, சத்தம்போட்டுள்ளார்.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆட்டினை திருடிச் சென்ற கல்லூரி மாணவன் அரவிந்த் குமார் மற்றும் அவனது நண்பன் மோகன் ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காதலர் தினத்தை கொண்டாடுவதற்கும், தனது காதலிக்கும் பரிசு வாங்கி கொடுக்க பணம் இல்லாத காரணத்தால் ஆட்டினை திருடியதாக தெரியவந்தது. இதனையடுத்து இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.