கரூரில் உள்ள ஒரு கோயிலில் பின்பற்றப்பட்டு வந்த எச்சில் இலை அங்கபிரதட்சணத்திற்கு அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர்.
வழக்கின் பின்னணி: கரூர் மாவட்டம் நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் சுவாமி நினைவு நாளில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகளின் மீது உருண்டு அங்கபிரதட்சணம் செய்யும் வழக்கம் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இதன்மூலம், சுவாமியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
2014 ஆம் ஆண்டு, இந்த நிகழ்வை பொதுவான சுகாதார மற்றும் சமூக காரணங்களால் தடை செய்ய வேண்டும் என்று கரூரைச் சேர்ந்த ஒரு நபர் வழக்கு தொடர்ந்தார். இதனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த பக்தர்கள் சாப்பிட்ட இலைகளின் மீது உருண்டு அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்வு நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில், 200 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த புனித நிகழ்வு மீண்டும் நடக்க வேண்டும் என்று மற்றொரு நபர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையின் போது, தனி நீதிபதி சடங்கை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கினார், இதனால் 2024 ஆம் ஆண்டு, கரூர் மாவட்டம் நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் சுவாமி நினைவு நாளில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகளின் மீது உருண்டு அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்வு மீண்டும் நடை பெற்றது.
மறுபரிசீலனை – நீதிமன்றம் வழங்கிய முக்கியமான உத்தரவு:
இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் சமூக அமைப்புகள் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு இன்று (மார்ச் 13, 2025) உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்வது சுகாதாரத்திற்கும், மனித மாண்பிற்கும் உகந்ததல்ல எனக் கூறினர். மேலும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு உச்சநீதிமன்றமே முன்னதாகவே தடை விதித்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதியின் அனுமதி உத்தரவை ரத்து செய்து, எச்சில் இலை அங்கபிரதட்சணத்திற்கு தடை விதித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.