Illegal immigrants: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற இனி ராணுவ விமானம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து ஒரு லட்சம் இந்தியர்கள் வெளியேறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அமெரிக்கா அதிபராக கடந்த ஜன., மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இதன் பிறகு, அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான சி 17 விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக குடியேறினால், அதனை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி, கடைசியாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை மார்ச் 1ம் தேதி ராணுவ விமானம் மூலம் அவர்களது நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியது. இந்த நிலையில், சட்டவிரோதக் குடியேறிகளை இனிமேல் ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்புவதில்லை என்று அமெரிக்க அரசு முடிவு செய்தது.
ராணுவ விமானத்தை பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு ஆவதால் பயணிகள் விமானம் மூலம் அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவிலிருந்து குவாத்தமாலாவுக்கு ராணுவ விமானத்தில் ஒருவரை அழைத்துச் செல்ல ரூ.4,07,374 செலவு ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவில் இருந்து பயணிகள் விமானம் மூலம் குவாத்தமாலா செல்ல ஒரு நபருக்கு ரூ.74,330தான் செலவு ஆகிறது. பயணிகள் விமானத்தைவிட நபர் ஒருவருக்கு 5 மடங்கு அதிக செலவு ஆவதை தடுக்கவே ராணுவ விமானத்தை தவிர்க்க முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க குடியுரிமை விதிகளில் மாற்றம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால், எச்1பி விசா வைத்துள்ள பெற்றோருடன் குழந்தையாகச் சென்று, தற்போது 21 வயதை கடந்த ஒரு லட்சம் இந்தியர்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணியாற்றும் இந்தியர்கள், கிரீன் கார்டு எனப்படும் நிரந்தரமாக அமெரிக்காவில் வசிக்கும் உரிமையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 12 ஆண்டுகளில் இருந்து, 100 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அமெரிக்க குடியேற்றத் துறை புள்ளி விபரங்களின்படி, 2023 மார்ச் நிலவரப்படி, எச்1பி விசாவில் பணியாற்றும் இந்தியர்களின் 1.34 லட்சம் குழந்தைகள், 21 வயதைத் தாண்டும் நிலையில் இருந்தனர். ற்கனவே, எச்1பி விசாவுக்கு அமெரிக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 21 வயதை பூர்த்தி செய்யும் பெற்றோரை சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு, வேலைக்கான விசா வழங்குவதற்கு டெக்சாஸ் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது.
இந்தக் காரணங்களால், 21 வயது நிரம்பிய ஒரு லட்சம் இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் இருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்கள் கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.
Readmore: அதிர்ச்சி!. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மீது தாக்குதல் முயற்சி!. லண்டனில் பதற்றம்!