இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இண்டேன் எரிவாயு இணைப்பு பெற அலுவலகத்திற்கு சென்று அங்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிறகு அவர்கள் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பித்து பிறகு சில தினங்கள் கழித்து சென்றால் அவர்கள் கேஸ் புத்தகத்தையும், ரெகுலேட்டரையும் தருவார்கள். கூடவே சிலிண்டரும் வந்துவிடும்.
அடுத்தடுத்த மாதங்களுக்கு சிலிண்டரை போன் மூலம் புக் செய்யலாம். இப்படித்தான் இந்த நடைமுறை இருந்தது. ஆனால், தற்போது இது எளிமையாகியுள்ளது. ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். வீடு தேடி புதிய சிலிண்டர் இணைப்பு வரும். இதற்கு 8454955555 என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும். இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்த பிறகு உங்கள் போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை ஓபன் செய்து விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
பிறகு விநியோகஸ்தர் உங்களை தொடர்பு கொள்வார். தற்போது இண்டேன் வாடிக்கையாளர்களும் தங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்து ரீஃபில் புக் செய்யலாம் என இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நீங்கள் இந்திய ஆயில் நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று புதிய இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் விவரங்களையும் இணைக்க வேண்டும். இந்த வசதி கடந்த 2015 மே 1 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். இந்த வசதி இந்தியா முழுவதும் படிப்படியாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. சிலிண்டரின் எண்ணிக்கை, பிரஷர் ரெகுலேட்டரின் விவரங்கள் அடங்கிய ஆவணம் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எவ்வித சிரமமும் இன்றி புதிய சிலிண்டர் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.