கோட் திரைப்பட கொண்டாட்டத்தின் போது ரசிகர்கள் கட்சி கொடிகளை பயன்படுத்த கூடாது என நடிகர் விஜய் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கட்சியின் தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் வருகிற 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான அனுமதி வேண்டி, கடந்த 28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அன்று மாலையே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தலைமையில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்தனர். இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இம்மாநாடு தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், 21 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த சூழலில் தான் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியானது. திரைப்பட கொண்டாட்டத்தின் போது ரசிகர்கள் கட்சி கொடிகளை பயன்படுத்த கூடாது என தலைமை வாய்மொழியும் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பின் முக்கியமான காரணம் உள்ளது. அதன்படி பொது இடங்களில் கட்சி கொடி ஏற்ற அனுமதி வேண்டும். அதனால் தேவை இல்லாத சிக்கல் வரும். அதோடு இந்த படம் என்பது விஜயுடையது மட்டுமல்ல. தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இயக்குனர் வரை இது பலரின் படம். இதனால் இதில் தன்னுடைய கட்சி கொடியை பயன்படுத்துவது சரியாக இருக்காது என்று வாய் மொழி உத்தரவாக விஜய் இதை கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது .