எந்த மதமும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில்லை என்றும் மத கொள்கைகளை திரித்து கூறுபவர்களால்தான் பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து பணியாற்ற சட்ட விரோதமாக சிரியா செல்ல முயற்சித்தனர். அப்போது துருக்கி அதிகாரிகளால் எல்லை பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் அவர்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டனர். கேரளாவில் இருந்து கொண்டு பல இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் பணியாற்றுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூவரில் இருவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், மூன்றாவது நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்தும் , சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் கோரியும் கேரளா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மூன்று பேரின் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் தாமஸ் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, எந்த மதமும் தீவிரவாதத்தை பரப்புவது இல்லை எனவும் பயங்கரவாதம் என்பது மக்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் ஒரு தீமை. இது தேசத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தையோ, வெறுப்புணர்வையோ யாரிடமும் பரப்புவது இல்லை. மத வெறியர்கள் தான் இந்த கருத்துகளை தவறாக சித்தரித்து மக்களிடம் கூறி வருகின்றனர் என கூறியது.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர், தண்டனை காலமான ஏழு ஆண்டுகளில் 5 ஆண்டுகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. மீதம் 2 ஆண்டுகள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஐந்து ஆண்டுகளிலும் அவர்கள் ஜாமின் கேட்கவில்லை. எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்குமாறு வாதிட்டார். மேலும் தண்டனை காலம் முடியும் வரை எந்தவித அசம்பாவிதமும் நடைபெற வில்லை எனவும், நல்ல முறையில் சிறை தண்டனையை கழித்ததால் அவர்களின் தண்டனையை குறைக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த தேசிய புலனாய்வு அமைப்பான NIA அதிகாரிகள், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவும் எல்லா வாய்ப்புகளும் உள்ளன. எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என NIA அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த வாதங்களை ஏற்றக்கொண்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.