அனைத்து தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்ய எவ்வித தடையும் விதிக்க கூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 200 ஆண்டுகள் பழமையான கடவு காத்த அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் அமைந்துள்ள பகுதியில் பட்டியலின மக்கள் அதிகளவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மக்கள் அய்யனார் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவின்போதும், அவர்களை அனுமதிப்பதில்லை.
இந்த கோயிலுக்கு செல்லும் பட்டியலின மக்கள் அனைவருமே வெளியில் நின்று தான் சாமி கும்பிடும் நிலை உள்ளது. இந்நிலையில் தான், இதுதொடர்பாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் விவேகா சுரேஸ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”பட்டியலின மக்களை கடவு காத்த அய்யனார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தனபால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ”அனைத்து தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்ய எவ்வித தடையும் விதிக்கக் கூடாது. அப்படி, கோயிலுக்குள் வந்து சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டால் உடனடியாக போலீஸை அணுகி உரிய பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Read More : மேலும் ஒரு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பால் மாணவ, மாணவிகள் குஷி..!!