தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது மார்ச் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளது.
அதே போல மார்ச் 28-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30 ஆகும். வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும். சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை பெறப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வடசென்னை தொகுதி
வடசென்னை தொகுதி வேட்பாளர்கள் பழைய வண்ணாரப்பேட்டை, பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜாவிடமும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.தனலிங்கத்திடமும் வேட்புமனுக்களை அளிக்கலாம்.
மத்திய சென்னை
மத்திய சென்னை வேட்பாளர்கள் செனாய் நகர், புல்லா அவென்யூவில் அமைந்துள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ.பிரவீன்குமார் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா ஆகியோரிடம் வேட்புமனுக்களை அளிக்கலாம்.
தென்சென்னை
தென்சென்னை தொகுதிக்கு அடையாறு, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள சென்னை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.பி.அமித் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பி.எம்.செந்தில் குமார் ஆகியோர் வேட்புமனுக்களை பெறுவார்கள்.