செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் முயற்சியாக புதிய அதிநவீன அணு ஆயுத டிரோனை கடலுக்கு அடியில் பரிசோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் நீண்ட நாட்களாக பகை நிலவி வருகிறது. இதனிடையே தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இந்த இரு நாடுகளும் சேர்ந்து கடந்த வாரம் கூட்டுப்போர் படை பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்துவரும் நிலையில், இந்த கூட்டுப்போர் படை பயிற்சிக்கு பதலடி தரும் விதமாக வடகொரியா தற்போது கடலுக்கு அடியில் புதிய அதிநவீன அணு ஆயுத பரிசோதனையை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது நாட்டின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரிய நாட்டின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலுக்கு அடியில் டிரோன் அணு ஆயுதத்தை செலுத்தி, அந்த டிரோன் 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் சுமார் 60 மணி நேரம் பயணம் செய்து பின்னர், அதனை வெடித்து சிதற வைத்து செயற்கை சுனாமியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் எதிரிநாட்டு கடற்படைகள், மற்றும் துறைமுகங்களை தாக்கி அழிக்க வடகொரியா திட்டமிட்டுள்ளது.