10ஆம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத நிலையில், 34 அரசுப் பள்ளிகளை மூடுவதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 56.49 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த தேர்வில் 34 அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் தேர்வில் தோல்வி அடைந்தனர். இந்த 34 பள்ளிகளையும் மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவு அம்மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அசாம் மாநில கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு, ”ஒரு மாணவரை கூட தேர்ச்சி பெற வைக்க முடியாத பள்ளிகளுக்கு மக்களின் வரி பணத்தை செலவிடுவது அர்த்தமற்றது என்றும் தேர்ச்சி விகிதம் இல்லை என்றால் அந்த பள்ளிகள் இல்லாமல் இருப்பதே நல்லது” என்றும் கூறியுள்ளார். இவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை எங்கு சேர்ப்பது என கேள்வி எழுப்பிய அசாம் மாநில எதிர்க்கட்சிகள், ”34 பள்ளிகள் 100 சதவீதம் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று அமைச்சர் ரனோஜ் பதவி விலக வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.