கலைஞரின் ’வருமுன் காப்போம்’ திட்டத்தில் கண்புரை பரிசோதனை சேர்க்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் கண் அறுவை சிகிச்சை தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. கருத்தரங்கில் தலைமைச் செயலரும், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவக் குழுமத் தலைவருமான அமர் அகர்வால் தலைமை வகித்தார். பொருளாளரும், ராஜன் கண் மருத்துவமனை தலைவருமான மோகன்ராஜன், அறிவியல் குழுத் தலைவர் மஹிபால் எஸ்.சச்தேவ், அகில இந்திய கண் மருத்துவவியல் சங்கத்தின் அறிவியல் குழுத் தலைவர் லலித் வர்மா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவவியல் துறை மருத்துவர் நம்ரதா ஷர்மா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

கருத்தரங்கை தொடங்கி வைத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ”இந்தியாவில் கண் பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. பார்வைத் திறன் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிப்பது கவலைக்குரியது. ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால், பெரும்பாலான கண் பிரச்சனைகள் மற்றும் பார்வை இழப்புகளைத் தடுக்க முடியும். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 460 முகாம்கள் நடைபெற்றுள்ளன. இனி நடைபெறும் முகாம்களில், ஏழைகள் பயன்பெறும் வகையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனையும் சேர்க்கப்படும். கண்புரை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு, கண் மருத்துவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.