கிரைய பத்திரம் பெற்றுள்ள தொழிற்முனைவோர் எளிதில் பட்டா பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் சிறுதொழில் 130 தொழிற்பேட்டைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பேட்டையில் அமையப் பெற்றுள்ள பெரும்பாலான நிலம் சிட்கோ பெயரில் மாற்றப்படாமல் சர்க்கார் புறம்போக்கு என்றே வருவாய் ஆவணங்களில் உள்ளது. சுமார் 60 ஆண்டிற்கும் மேலாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததன் காரணமாக, தொழிற்முனைவோர்களால் பட்டா பெற இயலவில்லை. இதனால் தொழிற்முனைவோர் தங்களது தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதில் சிரமம் இருந்து வந்தது.
இதற்கு தீர்வு காணும் விதமாக 30.11.2021 தேதியில் அரசாணை எண்.72 (குறு, சிறு மற்றும் நடுத்தரத்துறை நிறுவனங்கள் துறை) பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, இத்தொழிற்பேட்டைகளின் நிலங்களின் வகைபாடு அரசு புறம்போக்கு என இருந்ததனை இரயத்துவாரி என மாற்றம் செய்ய அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் கீழ் அதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டு 09.02.2022 மற்றும் 19.09.2022 அன்று கூட்டப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் பேரில் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்ட மனைகளுக்கு மட்டும் நிலத்தின் வகைபாடு இரயத்துவாரி என மாற்றம் செய்து இரு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
இது வரை 1490.46 ஏக்கர் நிலத்தின் வகைபாடு இரயத்துவாரி மனை / இரயத்துவாரி புஞ்சை என மாற்றம் செய்து தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் மூலமாக பத்திரம் பெற்றுள்ள தொழில் முனைவோருக்கு கடந்த 28.03.2023 வழங்கும்பணி அன்று தொழில் தொடங்கி வைக்கப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களால் 11.05.2023 அன்று கிரைய பத்திரம் பெற்ற 216 தொழில் முனைவோர்க்கு பட்டா வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கிரைய பத்திரம் பெற்றுள்ள தொழிற்முனைவோர்கள் விரைந்து பட்டா பெற வேண்டி மனு செய்ய ஏதுவாக நேற்று தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவன தலைமை அலுவலக முதல் தளத்தில் தொழில்முனைவோர் பட்டா கோரி மனு செய்ய பிரத்யேக இ-சேவை மையம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் கிரைய பத்திரம் பெற்றுள்ள தொழிற்முனைவோர் எளிதில் பட்டா பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.