CBSE schools: மாநில அரசின் அனுமதி இல்லாமலே சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று மொழிகளை படிக்க முடிகிறது. தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு நடத்தும் அரசு பள்ளிகளில் மட்டும் இருமொழிக் கல்வி இருக்கிறது. இது அரசு பள்ளி மாணவ, மாணவிகளை வஞ்சிக்கும் செயல் என்று பாஜகவினர் கூறி வருகிறார்கள்.
இதனால் திராவிட கட்சிகளுக்கும், பாஜகவிற்கும் இடையில் காரசார மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடர்பாக முக்கிய நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது. அதாவது, மாநில அரசின் அனுமதி இல்லாமலே இனி சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிபிஎஸ்இ பள்ளிகள் ஆரம்பிக்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் தடையில்லா சான்று தேவைப்பட்டது.
தற்போது இந்த விதிகளில் திருத்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் புதிதாக சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க வேண்டுமெனில், மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறையிடம் NOC எனப்படும் தடையில்லா சான்று வாங்க வேண்டியிருந்தது. இந்த NOC இனிமேல் தேவையில்லை என்பது தான் புதிய திருத்தம்.
இதன்மூலம் சிபிஎஸ்இ பள்ளிகள் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும். ஒரு சில விஷயங்களுக்கு மாநில அரசிடம் வர வேண்டியிருந்தது. இனிமேல் நேரடியாக மத்திய அரசை அணுகினால் போதும் என்ற நிலை வந்துள்ளது. அதேசமயம் ஒரு விதியையும் குறிப்பிட்டுள்ளனர். சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசிடம் விண்ணப்பித்து 30 நாட்கள் வரை காத்திருங்கள். அதுவரை எந்தவித ஒப்புதலும், அனுமதியும் வரவில்லை எனில், சிபிஎஸ்இ நிர்வாகத்தை அணுகலாம். விரைவாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.