வாட்ஸ் அப் செயலியில் ஸ்கிரீன் ஷேரிங் உள்ளிட்ட வசதிகள் இன்று முதல் அறிமுகமம் செய்யப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி, தனது பயனர்களுக்கு அடிக்கடி பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது, திரையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியையும், லேண்ட்ஸ்கேப் மோடில் வீடியோ பார்க்கும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஷேர்’ ஐகானைக் கிளிக் செய்து, குறிப்பிட்ட பயன்பாட்டைப் பகிர்வது அல்லது முழுத் திரையையும் பகிர்வது என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் திரையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். வேலை தொடர்பாக ஆவணங்களைப் பகிர்வது, குடும்பத்தினருடன் புகைப்படங்களை தேடுவது, விடுமுறைக்கு திட்டமிடுவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது போன்றவற்றை திரையைப் பகிர்வதன் மூலம் அழைப்பின் போது திரையின் நேரடிக் காட்சியைப் பகிரலாம்.
மேலும், நீங்கள் லேண்ட்ஸ்கேப் முறையில் வீடியோ அழைப்புகளைச் செய்து கொள்ளலாம். எனினும், வீடியோ காலில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சங்கள் படிப்படியாக ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் டெஸ்க்டாப் தளங்களுக்கு வரும் என்பதால் உடனடியாக இந்த வசதியை பயனர்கள் பெற முடியாது என்றும் விரைவில் பயனர்களுக்கு இந்த புதிய வசதிகள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.