‘அஞ்சலகங்களில் ‘இ-கேஒய்சி’ முறையில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே பணத்தை சேமிக்க விரும்புகின்றனர். ஆனால், வங்கிகளை விட தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு துவங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால், இங்கு தான் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு துவங்கியுள்ளனர். மேலும், அவர்களுக்கென ஏராளமான திட்டங்களும் உள்ளன.
இந்நிலையில் தான், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறுகையில், ”அஞ்சலகங்களில் ஏராளமான சேமிப்பு கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகளை தொடங்க ஆதார் எண், முகவரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தற்போது பேப்பர் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், இ-கேஒய்சி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், இனி வாடிக்கையாளர்கள் ஆதாரை பயன்படுத்தி கை விரல் ரேகை மூலம் சேமிப்பு கணக்கை எளிதாக தொடங்கிக் கொள்ளலாம். இதற்காக அண்ணசாலை, பார்க் டவுன், தியாகராநய நகர், மயிலாப்பூர், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 20 இடங்களில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் இந்த இ-கேஒய்சி வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இ-கேஒய்சி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இனி படிவம் பூர்த்தி செய்வதற்கான நேரமும், கவுன்ட்டர்களில் நிற்பதற்கான நேரமும் குறையும். மேலும், மார்ச் மாத இறுதிக்குள் 557 துணை அஞ்சல் நிலையங்களிலும் இந்த இ-கேஒய்சி செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் இனி, கை ரேகை பதிவு மூலம் சேமிப்புக் கணக்கை தொடங்கிக் கொள்ள முடியும். இதற்காக எந்த படிவத்தையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. மேலும், சென்னை நகர அஞ்சல் வட்டத்திற்கு உட்பட்ட அஞ்சலகங்களில் 5,500 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.