இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமாக பழகி, பின்னர் பெண்களை ஆடையின்றி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியில் திருமணமான பெண்களுக்கான சமூக வலைதளக் குழு இயங்கி வரும் நிலையில், அந்த குழுவில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா குடிசை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (29) என்பவர் இணைந்து தகவல்களைப் பகிர்ந்து வந்துள்ளார். ஆரம்பத்தில் சகோதரி என அழைத்துப் பேசி வந்த சுரேஷ், நாளடைவில் பெண்ணிடம் குடும்ப விஷயங்களை பேசி காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் ஆடையின்றி சுரேஷ்குமாருடன் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். அதனை சுரேஷ்குமார் அவருக்குத் தெரியாமல் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த பெண்ணிடம் ரூ.10,000 கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன பெண், ரூ.6 ஆயிரம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து சுரேஷ்குமார் மிரட்டியதை அடுத்து அந்த பெண், புதுச்சேரி சைபர் கிரைமில் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனைப் பறிமுதல் செய்து சோதனையிட்டதில் பல பெண்களை இப்படி ஏமாற்றி வீடியோ பதிவு செய்து கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து பணம் பறித்திருப்பது தெரியவந்தது. ஆடையின்றி பெண்களுடன் வீடியோ காலில் பேசி அதைப் பதிவு செய்து பணம் பறித்துள்ளது, அவரது வங்கி கணக்கை ஆராய்ந்ததில் தெரிந்துள்ளது.
இதேபோல், சுரேஷ்குமாரிடம் ஏமாந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் தேனி, திருச்சியில் இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்நிலையில், சுரேஷ்குமாரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.