நர்சிங் படித்த கல்லூரி மாணவி ஜலதோஷத்திற்காக வெந்நீரில் மாத்திரை போட்டு ஆவி பிடிக்க முகம் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பூமங்கலத்தில் வசித்து வருபவர் கோமதி நாயகம். தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் 19 வயது கௌசல்யா. அதே பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக ஜலதோஷம், மூக்கடைப்பு என சிரமப்பட்டு வந்த கௌசல்யா, அருகில் உள்ள மருந்துக் கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு கிளம்பிய கவுசல்யா, அதன்முன்பு வெந்நீரில் மருந்தைப் போட்டு ஆவிப் பிடித்துள்ளார். ஆவிப் பிடித்த அடுத்த நிமிடமே மயக்கமான கவுசல்யாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் கவுசல்யா தன் முன்பாக இருந்த வெந்நீர் பாத்திரத்திலேயே தலை கவிழ்ந்து மயங்கி விழுந்தார். கீழே விழுந்தும், வெந்நீர் பட்டும் அவர் காயமடைந்துள்ளார். இதனை பார்த்த கவுசல்யாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனால் பெற்றோர், உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜலதோஷ பிரச்னைக்கு ஆவிப்பிடித்து மயங்கி விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எதுவாக இருப்பினும் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து மருந்து மாத்திரைகளை பயன்படுத்துங்கள். சுய மருத்துவம் மிகப்பெரிய சிக்கலில் கொண்டு விட்டுவிடும் என மருத்துவர்கள் மாறி மாறி எடுத்துக் கூறி வருகின்றனர். இருந்தாலும் இளைய தலைமுறையின் அலட்சிய மனோபாவத்தால் விபரீதங்கள் விளைந்து விடுகின்றன. இதை பார்த்தாவது இனி வரும் இளசுகள் தம்மை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் சரிதான்.