கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதை அடுத்து 18 தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த பயங்கரமான மூன்று ரயில் விபத்தைத் தொடர்ந்து 18 தொலை தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழு ரயில்கள் டாடாநகர் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதன் படி, 12837 ஹவுரா-பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 12863 ஹவுரா-பெங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் 12839 ஹவுரா-சென்னை மெயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், 12895 ஹவுரா-பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 20831 ஹவுரா-சம்பால்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் 02837 சந்த்ராகாச்சி-பூரி எக்ஸ்பிரஸ் ஆகியவையும் இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, கோவாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸைக் துவக்கி வைப்பதற்காக சென்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கோவாவுக்கான தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடியால் இந்த ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்க இருந்தது, இது கொங்கன் ரயில்வேக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். ஆனால் விபத்து காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.