முன்பெல்லாம் திருட்டு வழிப்பறி கொள்ளை நகை பறிப்பு போன்ற சம்பவங்களில் ஆண்கள் தான் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது இது போன்ற சம்பவங்களில் பெண்களும் களமிறங்கி இருப்பது பலரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
சென்னையை சேர்ந்த கூலி தொழிலாளியான விஜயகுமார் அவருடைய மகளின் திருமணத்திற்காக நகை வாங்குவதற்கு சென்ற 16ஆம் தேதி தன்னுடைய மனைவியுடன் ரூபாய் 2.50 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மாநகர அரசு பேருந்தில் சென்னை டிநகருக்கு பயணித்தார்.
அதன் பிறகு, அவர்கள் இருவரும் பிரபல நகை கடை ஒன்றில் நகை வாங்கிக்கொண்டு பணத்தை செலுத்துவதற்காக பையை நோட்டமிட்ட போது அதிலிருந்து வானம் முழுவதும் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதிகள், பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் இந்த பணத்தை திருடி இருப்பார்களோ என்று சந்தேகித்தனர்.
ஆகவே தம்பதிகள் இருவரும் உடனடியாக வந்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அந்த புகாரின் அடிப்படையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில் விஜயகுமார் தம்பதிகளிடம் திருடி சென்றது பரமக்குடியைச் சேர்ந்த உறவினர்களான கவிதா மற்றும் ரேகா என்ற 2 பெண்கள் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டையை தொடங்கிய காவல்துறையினர் மயிலாடுதுறை பகுதிகளில் இருந்த கவிதா மற்றும் ரேகாவை சனிக்கிழமை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து தமிழ்நாடு முழுவதும் இதே போன்ற தங்களுடைய கை வரிசையை காட்டி இருக்கிறார்கள் என்ற விபரமும் தெரிய வந்துள்ளது.
அதோடு, இந்த இரு பெண்கள் மீதும் ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் நகை பறிப்பு போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. 15 ஆம் தேதி சென்னை கிண்டியில் இதே போன்ற ஒரு பயணியிடம் ஓடும் பேருந்தில் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.