சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்தவர் பகவதி. பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவர், நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதில் இரண்டை தனது தம்பி ஆதி (18) என்பவர் மூலம் தனது தாத்தா சண்முகநாதன் (72) வசிக்கும் எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்திற்கு கொடுத்து அனுப்பியுள்ளார். மீதம் உள்ளதை தனது அம்மாவிடம் கொடுத்துள்ளார். இரவு 8.30 மணியளவில் பகவதியின் தாய் நதியா அந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டபோது அதில் வித்தியாசமான வாசனையை உணர்ந்ததால், அதனை தொடர்ந்து சாப்பிடாமல் வைத்து விட்டு தனது தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால், சண்முகநாதன் ஏற்கனவே அந்த சிக்கன் ரைஸை சாப்பிட்டு முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சண்முகநாதன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நதியாவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த சிக்கன் ரைஸை தடயவியல் சோதனைக்கு அனுப்பிய நிலையில், அந்த சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது.
சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தனது தாய் மற்றும் தாத்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என தான் சிக்கன் ரைஸ் வாங்கிய ஹோட்டல் மீது பகவதி புகாரளித்த நிலையில், ஹோட்டல் சீல் வைக்கப்பட்டது. மேலும், ஹோட்டல் உரிமையாளர் ஜீவாநந்தனிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பகவதியின் தாய் மற்றும் தாத்தா தவிர மற்றவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத நிலையில், பகவதியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த விவகாரத்தில், சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது அம்பலமாகியுள்ளதால் இந்த விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Read More : வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.20,500 வருமானம்..!! போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்..!!