பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார்..
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால், தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி புரிய பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக, தமிழக அரசின் இலவச மிதிவண்டித் திட்டம் தொலைதூர மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது.
இந்த திட்டம் முக்கியமாக பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 2001ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அத்துடன் இந்த திட்டம் உயர்நிலைக் கல்வி படிக்கும் SC / ST பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இது மாணவர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றதால், 11ஆம் வகுப்பு அனைத்து பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அத்துடன் இதனை பெறுபவர்கள் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
இதனிடையே 2021-2022ஆம் ஆண்டு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.. அதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஐடிஐ பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, 6.18 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டது…
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.. சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது..