ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். பலர் பட்டினியால் வாடினர். இதே போல வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பலர் இலவச ரேஷன் உணவு பொருட்களை கூட பெற முடியாமல் அவதி அடைந்தனர். இதனால் மத்திய அரசு “ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்த ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலமாக இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் எங்கும் பொருட்கள் வாங்கலாம் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தங்களது சொந்த மாநிலத்தை விட்டு பிற பகுதிகளில் வசிப்பவர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவால் இனிமேல் ரேஷன் இடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்காது. அதனைப் போலவே இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்தன, இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் இந்த அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும், இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.