“ஒரே நாடு ஒரே தேர்தல்” நாடு முழுவதும் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்வதற்கான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு நபர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது, “அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின்படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு குறித்த காலத்துக்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் கடமை. சட்ட விதிகளின்படி, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நடைபெறும் நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த நேரம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலை அறிவிக்கலாம். சட்டசபை தேர்தலிலும் இதே விதிமுறைகள் உள்ளன.
விதிகளின் படி முறையாக எந்த நேரத்திலும் தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியிடப்படும். புதிய தகுதியுள்ள வாக்காளர்கள் தங்கள் தரவுகளில் ஏதேனும் முரண்பாடுகளைக் கண்டறிந்தால், திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.சிறையில் உள்ள கைதிகளுக்கு சட்டப்படி வாக்களிக்க அனுமதி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.