ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாவிட்டால், திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக அரசு சட்டம் இயற்றியது. திமுக அரசு நீதிமன்றத்தில் முறையாக வாதாடாமல் இருந்ததால், தீர்ப்பு ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களுக்கு சாதகமாகியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் குழு அறிக்கை அளித்த பிறகும், தடை சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. ஏற்கனவே, கடந்த மே 2ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த அம்பத்தூரைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் சரவணகுமார் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை அரசு பொருட்காட்சியில் கடந்த 15ஆம் தேதி பணியில் இருந்தபோது, துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட காவலர் காளிமுத்து 16ஆம் தேதி (நேற்று) உயிரிழந்தார். இவரும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து, கடன் வாங்கி விளையாடி, ஒரு கட்டத்தில் கடன் பிரச்சனையால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்ததாக செய்தி வந்துள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்டம் உட்பட அனைத்து நாசகார செயல்களையும் ஒடுக்குவதற்கான நடவடிக்கையை திமுக அரசு உடனே எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.