ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அதிமுக அரசு தடை செய்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்கள் திமுகவுடன் கைகோர்த்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னிமலை வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்தார். பெருந்துறை பழைய பேருந்து நிலையம் முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அதிமுக அரசு சட்டம் கொண்டுவந்து தடை செய்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்கள் திமுகவுடன் கைகோர்த்து உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கருத்து கேட்கப்படும் என்று திமுக அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை இயற்றி தடை செய்தது. சரியான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றத்தில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டன. சரியான ஆதாரத்தை திமுக அரசு அளிக்கவில்லை. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 20,000 கோடி பணம் வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் போது தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மக்கள், கல்வி உள்ளிட்ட அனைத்திலும் மேம்பட தனி கவனம் செலுத்தப்படும். அதிமுக ஆட்சியில் ஏழை-எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அளித்து வந்தது. தற்போது திமுக அரசு மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஏமாற்றி வருகிறது”. இவ்வாறு அவர் பேசினார்.