ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் பெண்ணிடம் கார் பரிசு விழுந்துள்ளதாக கூறி ரூ.3.89 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். அவர் அடிக்கடி செல்போன் அப்ளிகேஷன் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பர்சேஸ் செய்யும் பழக்கம் உடையவர். ஆன்லைனில் துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வந்துள்ளார். அந்த ஆன்லைன் பர்சேஸ் அப்ளிகேஷனை பயன்படுத்தி அவர் அதிக அளவில் பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. அதனால், குலுக்கல் முறையில் சிறந்த வாடிக்கையாளராக அவர் தேர்வு செய்யப்பட்டு ரூ.12.80 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்துள்ளதாக அவரது செல்போனுக்கு தகவல் வந்துள்ளது.

ஆனால், அதற்கு வரி மற்றும் பதிவு செய்வதற்கான முன்பணம் கட்ட வேண்டும் எனவும் அந்த கட்டணம் சுமார் ரூ.3,89,800 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை நம்பிய பாரதி, அவர்கள் கேட்ட முன் பணத்தை பல்வேறு தவணையாக ஆன்லைனில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், அவர் பணத்தை செலுத்தி பல்வேறு மாதங்கள் ஆகியும் இதுவரை அவருக்கு கார் கிடைக்கவில்லை. இதனை அடுத்து பாரதி, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார். இதனால், குழப்பம் அடைந்த பாரதி இது குறித்து நாமக்கல் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் கார் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் பணம் பறித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஆன்லைன் மூலம் தமிழகத்தில் தினந்தோறும் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க தமிழக காவல்துறையும் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தினந்தோறும் இது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி வருகிறது. ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடி குறித்து மக்களிடம் தெளிவான சிந்தனை வரும் வரை இந்த மோசடியை தடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.