88 வயது மனைவியை கத்தியால் குத்திய 91 வயது முதியவருக்கு கேரள நீதிமன்றன்றம் ஜாமீன் வழங்கியது. கடைசி வரை மனைவி மட்டும்தான் உடன் இருப்பார் என்றும் அறிவுரை வழங்கியது.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள புத்தன்குரிசு என்ற பகுதியைச் சேர்ந்தவர் தாசன் (91). இவரது மனைவி சாரதா (88). இருவருக்கும் வயதானபோதிலும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தாசனுக்கும், சாரதாவுக்கும் இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டது.
தகராறு தீவிரமானதில் தாசன் தன்னுடைய மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த சாரதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புத்தன்குரிசு போலீசார் தாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாசன் மீது கொலை முயற்சி உள்பட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்ட இவர் பின்னர் ஜாமீன் கோரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து தாசன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த மனு நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் தன்னுடைய ஜாமீன் உத்தரவில், ‘மனைவிதான் தன்னுடைய சக்தி என்று கணவனும், கணவன் தான் தன்னுடைய சக்தி என்று மனைவியும் உணர வேண்டும். வயதான போதிலும் கணவன் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்ற அன்பின் காரணமாகவே தாசனை சாரதா கண்காணித்து வந்துள்ளார். இதை தவறு என்று கூற முடியாது. கடைசி நாள் வரை மனைவி தான் உடன் இருப்பார் என்பதை தாசன் புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் இணைந்து தங்களுடைய வாழ்க்கையின் இன்னிங்சை மகிழ்ச்சியாக பூர்த்தி செய்ய வேண்டும்’ என அறிவுரை கூறி ஜாமின் வழங்க உத்தரவிட்டார்.