ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய ஜெர்சியில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ இருக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ள நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் ”பாரத் குடியரசு தலைவர்” என அச்சிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய ஜெர்சியில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ இருக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு வீரேந்திர சேவாக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், “ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பெயர். எங்கள் அசல் பெயரை ‘பாரத்’ அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற நீண்ட காலமாகிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் எங்கள் வீரர்கள் மார்பில் பாரத் இருப்பதை உறுதி செய்ய பிசிசிஐ மற்றும் ஜெய் ஷாவை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்-கின் கருத்துக்கு தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “மரியாதைக்குரிய ஐயா, ஏன் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா..? என கேட்டுள்ளார். மேலும், நாட்டின் பெயரை மாற்றுவதால் எப்படி பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும்? நம்முடைய நாட்டை ’இந்தியா’ என்றும் ’பாரத்’ என்றும் நாம் அனைவரும் அறிவோம். ஆனால், திடீரென ஏன் இந்தியா என்ற பெயரை துறக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.