வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, காலி பணியிடங்களை நிரப்புவது, நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்குவது ஆகிய 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் கடந்த 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் வரும் 30, 31-ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்தார். அதன்படி ஜன.30, 31 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் 28ம் தேதிசனி, 29ம் தேதி ஞாயிறு என்பதால் ஜனவரி 28,29,30,31 ஆகிய 4 நாட்களுக்கு வங்கிகள் தொடர்ந்து இயங்காது என தெரிகிறது. மேலும் நாளை குடியரசு தினம் என்பதால் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறிப்ப்பிடத்தக்கது. அதன்படி இன்று மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் என்பதால் வங்கி தொடர்பான பணிகளை உடனடியாக முடிப்பது நல்லது.