கூகுள் மேப்பை நம்பி இரவு நேரத்தில் காரில் பயணித்த குடும்பத்தினர், தண்ணீர் நிறைந்த வயலில் காரை பார்க்கிங் செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள திரூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பொன்முண்டாவில் இருந்து புதுப்பரம் நோக்கி காரில் பயணம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பாலசித்ரா மலைப்பாதை வழியாக சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் என கூகுள் மேப் காட்டியுள்ளது. இதனால், அவ்வழியாக செல்ல அவர்கள் முடிவு செய்து பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென செங்குத்தான பாதை வழியாக சென்று கொண்டிருந்த நிலையில், சாலை முடிவுக்கு வந்துள்ளது. அப்போது, கார் நெல் வயலில் இறங்கியது. முன்னால் இருந்ததெல்லாம் நீர் நிறைந்த வயல். இரவு நேரம் என்பதால் காரை எடுக்க முடியாததால் காரை அங்கேயே விட்டுவிட்டு சாலைக்கு நடந்து சென்று வேறு வாகனத்தை கொண்டு வந்து பயணத்தை அந்தக் குடும்பத்தினர் தொடங்கினர்.
மறுநாள் காலை, உள்ளூர் மக்கள் காரை கயிறுகட்டி சிரமப்பட்டு இழுத்து காரை சாலைக்கு கொண்டு வந்தனர். இதேபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளன. டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் கேரளாவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாக்கில் விழுந்தனர். இச்சம்பவம் கடந்த மே மாதம் குருபாந்தறையில் நடந்தது. குறப்பந்தரா-கல்லாரா சாலையில் உள்ள குறப்பந்தரா கடவு பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் கூகுள் மேப்பைப் பயன்படுத்தி நாம் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் என்பது உண்மைதான் என்றாலும் இரவு நேரங்களில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.