Reliance: செயற்கை நுண்ணறிவு சலுகைகளை விரிவுபடுத்தும் நோக்கில், OpenAI மற்றும் Meta நிறுவனங்கள், ரிலையன்ஸ் உடன் ஏஐ தொடர்பான கூட்டாண்மைக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து The Information வெளியிட்ட அறிக்கையில், OpenAI மற்றும் மெட்டா, இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தியாவில் தங்களது செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், இந்த கூட்டாண்மை அமையக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிக்கையின்படி, OpenAI, தனது ChatGPT சந்தா கட்டணத்தை 20 டாலர் என்ற மாத சந்தாவிலிருந்து சில டாலர்கள் வரை குறைக்கும் வாய்ப்பை தனது ஊழியர்களுடன் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விலைக் குறைப்பை ரிலையன்ஸுடன் ஓப்பன்ஏஐ கலந்துரையாடியதா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரிலையன்ஸ் நிறுவனம், OpenAI-யின் AI மாதிரிகளை தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு API (Application Programming Interface) மூலம் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அத்துடன், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், இந்தியாவின் உள்ளூர் பயனர் தரவுகளை நாட்டிற்குள் பாதுகாக்க, ஓப்பன்ஏஐ மாதிரிகளை உள்ளூரிலேயே ஹோஸ்ட் செய்து இயக்கும் வாய்ப்பை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குஜராத்தின் ஜாம்நகர் நகரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தரவு மையம் என்று கூறியுள்ள மூன்று ஜிகாவாட் தரவு மையத்தை உருவாக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் மெட்டா மற்றும் ஓபன்ஏஐ மாடல்களை இயக்குவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், The Information வெளியிட்ட அறிக்கை குறித்து, மெட்டா நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதேபோல், OpenAI மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் உடனடியாக பதிலளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.